Social Icons

Featured Posts

Freitag, 2. Dezember 2016

ரட்சகி...!கவிதைநெடுந்தீவு தனு

மீட்புத் திட்டத்தின்
அன்பு வெளிப் பயணத்தில்
பரிணாமித்துக் கொண்டிருக்கும்
எனது தேவசகாயமே.
வனாந்தரங்களை
கடந்து கொண்டிருக்கையில்
உன் கால்களை
கவனிக்கின்றேன்...

நெய்தல் ஆடையிலே
மேகத்திடை தோன்றும்
அசரீரி போல்
ஓர் ஒளிப்பிளம்பு
எப்போது ஒட்டிக்கொண்டு
உன் முக அழகில்
பிரகாசிக்கின்றது...

பிரியமுள்ள புனிதவதியே
சத்துருக்களின் கோரப்பற்கள்
என் மன்றாட்டுக்களுக்கு
தடைகளாகின்றன.
களிகூர்ந்து அவர்களுக்கான
மோட்ச பாதையை
காட்டியருளும்...

ரட்சகியே
தீய சக்திகளின்
நெடிகளின் ஊடே
வாழ்ந்து கொண்டிருப்பவளே
இதோ உலகம் அழிகிறது
என் கரங்களை பற்றிக்கொள்
சாதி , மதமில்லா
மலை முகடு ஒன்றில்
குடியிருப்போம்.
கரங்களை பற்றிக்கொள்
என் ரட்சகியே...

ஆக்கம்   நெடுந்தீவு 
தனு

 


Donnerstag, 1. Dezember 2016

நான் எழுதுவது கடிதம் அல்ல!கவிதை ஈழத் தென்றல்

உணர்ச்சிகளை மையாக்கி
உண்மையை பதிகின்றேன் கண்ணே,
இதை கடிதம் என்று கொள்ளாதே
இனியும் கண்களால் என்னைக் கொல்லாதே!

சொல்புத்தி சுயபுத்தி இரண்டும் இன்றி
சொர்க்கத்தில் இருக்கின்றேன் பெண்ணே,
எல்லாம் உன்னாலே இம்மாற்றம்
எதுவென்றே சொல்ல தெரியா தேக்கம்!

காலடிச் சத்தம் காதில் இனிக்கின்றதே
கல கல சிரிப்பும் கருத்தைக் கலைக்கின்றதே,
பருவத்தின் மாற்றம் எந்தன்
பாதையை கூட மாற்றுகின்றதே!

தூது சொல்ல தோழனும் இன்றி
தொலை பேசி தொல்லை இன்றி
நான் வரையும் வரிகள் இவைகள்
உனக்கென்றான என் உணரவுகள்!

கடிதம் என்று கொள்ளாதே
கடிந்து ஏதும் சொல்லாதே
உள்ளம் என்றே உணர்ந்திடு
உண்மை அன்பை மதித்திடு!
ஆக்கம்
ஈழத் தென்றல்


Mittwoch, 30. November 2016

யேர்மனி அம்மா உணவகம் தலைவரின் பிறந்தநாளில் இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியது !

தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர்

இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு யேர்மனி , பேர்லின் நகரத்தில் இயங்கும் தாயக மக்களுக்கான பொதுநலச் சேவை அம்மா உணவகத்தால் வழங்கப்பட்டது. அம்மா உணவகம் இப் புனித மாதத்தில் மேலும் பல மாவீரர் குடும்பங்களுக்கான உதவிகளையும் , தாயகத்தில் அல்லலுறும் முன்னாள் போராளிகளுக்கும் சுயதொழில் வேலைத் திட்டங்களையும் உருவாக்கி கொடுத்ததோடு , சிறார்களுக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கியுள்ளது

தந்தை போலாகுமா! கவிதை வேதா. இலங்காதிலகம்.

முந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!

பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.

வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.

நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.

இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!


பா ஆக்கம் வேதா.
இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

ஒற்றை மழைத்துளி!குறும் கவிதை மீரா , ஜெர்மனி

ஒற்றை மழைத்துளி
ஒர் உருவம் கொள்ள
வண்ணம் தீட்டும்
ஆசை மனதுக்குள்
தூரிகை இல்லாமல்
விழிகளின் முன்னே
ஓவியமாய் உருப்பெறும்
ஆக்கம் மீரா         ஜெர்மனி  

Dienstag, 29. November 2016

"பொன்மணி குலசிங்கம்" காலமானார்

ஒரு சகாப்தம் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது.....
எங்கள் தாய்வீடாகிய இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' என அழைக்கப்பட்டவர்கள் பலருண்டு.
ஆனால் ஒரே ஒரு 'வானொலி அக்கா' மட்டுமே இருந்திருக்கிறார்.
அவரும் இன்று மறைந்துவிட்டார் என்ற இழப்புச் செய்தி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து நம் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை......
கவி பாரதி, 'புதுமைப்பெண்ணை' வர்ணித்த இந்த வரிகளை நினைக்குந்தோறும், எமது மனக்கண்ணில் தோன்றும் உருவத்தின் பெயர்தான்-
"பொன்மணி குலசிங்கம்"
1960 ம் ஆண்டு 'சிறுவர் மலர்' நிகழ்ச்சிக்குப் போனபோது அந்நிகழ்ச்சியின் 'நிலையத் தயாரிப்பாளராக' அவரை சந்தித்த நாள்முதல் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் வந்தபின்னும்..... ஏன் கடைசியாக அவுஸ்திரேலியாவில், நடைதளர்ந்த நிலையில் ( ஆனால் கம்பீரம் சற்றும் குறையாத நிலையில்) சந்தித்தபோதும், அந்த அன்னையை 'அக்கா' என்றுதான் உரிமையோடும் பாசத்தோடும் அழைத்திருக்கிறேன்.
அம்மா என்று அழைக்காமல் அக்கா என்று அழைத்தது ஏன்?
60 பதுகளில், மழலைகளுக்காக அவர் 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சியை நடத்தியபோதும் - அவர் 'வானொலி அக்கா'
பின், மகளிருக்காக 'மாதர் பகுதி' நிகழ்ச்சியை நடத்தியபோதும்- அவர் 'வானொலி அக்கா'தான்.
வானொலி வரலாற்றில் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் பணியாற்றிய காலம் - ஒருபொற்காலம்.
ஒலிபரப்பு உதவியாளர்களாக தமிழ் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பினைப் பெறவும் பின்னாளில் அவர்கள் மிகச் சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகப் பரிணமிக்கவும் வித்திட்டவர்.
வானொலி நிலயத்திற்கென, தமிழ் மெல்லிசை வாத்திய இசைக்கலைஞர் குழுவினரை முதன்முதலில் உருவாக்கியவர்.
வடக்கைச் சேர்ந்த இசைக்கலைஞருக்கென யாழ்ப்பாணத்திலேயே ஒரு ஒலிப்பதிவுக் கலையகத்தை நிர்மாணித்தவர். யாழ் பகுதியிலே ஒரு ஒலிபரப்பி நிலையம் (transmitter) அமைப்பதற்கும் காரணியானவர்.
6 மணியோடு நிறைவுபெற்ற தமிழ் வர்த்தக ஒலிபரப்பினை இரவு 10 மணிவரைக்கும் விரிவு படுத்தியவர்.


தென்னிந்தியாவுக்கென தனியாக ஒரு வர்த்தக ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்து பெரும் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தவர்.
மத்தியகிழக்கு நாடுகளுக்காவும் தனியாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வழிவகுத்தவர்.


ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டபோது உத்தியோகபூர்வமாக நடனமேதை 'சித்ரசேன' அவர்களது நாட்டிய நாடகம் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், அதற்கு முதல் நாளே 'Know your culture' என்ற பெயரில் 'பரதநாட்டியம்' பற்றிய ஒரு விவரணச் சித்திரத்தை முதன்முதலாக தயாரித்துச் சாதனை செய்தவர்(அந்நிகழ்ச்சிக்கு உதவித் தயாரிப்பாளர் என்ற பெருமையினையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தவர்)
எம்போன்றவர்களை ஊக்குவித்து கொழும்பிலும் யாழ்மண்ணிலும் நாடக விழாக்களை நடத்திச் சாதனை புரிந்தவர்.
திறமை உள்ளவர்கள் யாராயிருப்பினும் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த அந்த அன்னையைப்பற்றிய நினைவுகள் அடுக்கக்காய் வந்து நெஞ்சில் அலைமோதுகின்றன.


இனக்கலவரத்தின் பின்னரும் கூட, இரண்டாம் தரக் குடிமக்கள், போன்ற தாழ்வு மனப்பான்மை இன்றி, வானொலி நிலையத்தில் நாம் தலைநிமிர்ந்து நடக்கும் தைரியம், அவர் தமிழ் சேவையின் பணிப்பாளராக பணியாற்றிய காலம்வரை தொடர்ந்தது என்பதை, எமது சமகாலத்தில் பணியாற்றிய அனைவருமே இப்போது நன்றியோடு நினைவு கூர்வர் என நம்புகிறேன்.
'பிறப்பவர் எல்லோரும் என்றோ ஓர்நாள் இறப்பது நியதி'
என்ற உண்மையை உணர்ந்து உள்ளத்தைத் தேற்றி, அந்த அன்னையின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனை செய்வோம்.
குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Samstag, 26. November 2016

பிரிவும் ஒரு வகை மரணம்..கவிதை கவித்தென்றல் ஏரூர்

தாவணி போட்டு நான் நடந்தேன்
தண்ணீரில் தாமரை போல..
தாயவள் அன்பு தாங்கி நின்றது
தரணியில் நான் வாழ....

பெற்றவள் பெரும் கவலை - தன் பெற்ற
பெண்ணுக்கு திருமணம் அவள் கடமை
நற்குணமென்று தேடிடும் மாப்பிள்ளை
நாட்கள் நகர்ந்ததும் அறிந்திடும் அவன் பிழை

கற்பனை கனவுகள் கொண்டவள் மாது
கணவன் குற்றங்கள் குறைகள் கண்டிடும் போது
கட்டிலில் இன்பங்கள் காண்பது ஏது
கவலை கொட்டிடும் மனது விடியாது

இல்லற வாழ்வினில் இல்லாத ஏழை
இணைந்து கொண்டதும் வாழ்வாகிடும் பாலை
உள்ளதை சொல்லிட முடியாத பாவை
உள்ளுக்குள் உருகிடும் உணர்வுள்ள ஊமை

பிரிவு வந்து எரிக்கும் தன் உடலை
பாலுணர்வு கொண்ட பெண் விடலை
திணிக்கும் இரவு சுடும் தினமும் அவளை
தியாகம் செய்து வாடும் பெண் அவலை

இழந்ததை பெற்றிட நினைக்கும்
இன்பம் இரண்டென கலந்திட துடிக்கும்
நடந்தவை கண்முன்னே இனிக்கும் - உணர்வுகள்
நிழலின்றி தனிமையில் நடக்கும்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்


Disqus Shortname

Comments system

 
Blogger Templates